
'ஹூம்மானய’ என்ற பெயர் கடலலை, பள்ளத்திலிருந்து சீற்றத்துடன் மேலெழும்பொழுது தோன்றும் 'ஹூம்...!" எனும் சத்தத்திலிருந்து பிறந்ததாகக் கூறப்படுகின்றது
"ஹூம்மானய பார்க்கச் செல்கின்றோம்" என்று எனது தோழி சொன்னதும், இலங்கையின் தென்கடற்கரைக்குச் செல்கின்றோம் என்று மட்டும் தான் எண்ணினேன். ஆனால் நேரில் சென்று பார்த்தபொழுதுதான் அதன் அசாதாரண அழகையும் இயற்கையின் விநோதத்தையும் ரசிக்க முடிந்தது.
விபரம்: பாவானி பாலா | படங்கள்: மேனக அரவிந்த, தமித் விக்கிரமசிங்க
மலைச்சாரல்களின் பசுமையையும் கடற்கரைகளின் குளுமையையும் அதிக தூரம் பயணிக்காமலேயே அனுபவித்து மகிழக்கூடிய வாய்ப்பைக் கொண்ட நாடுகள் சிலவற்றில் இலங்கையும் ஒன்று. விசேடமாக சிறு பாறைக் குன்றுகளைக் கொண்ட கடற்கரையோரங்கள் இலங்கையின் தென்பகுதிக்குச் சொந்தமானவை. ஒப்பனைகள் இல்லாத இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் தென்கரையோரப் பிரதேசமான திக்வெல்லயில் அமைந்துள்ள சிறிய மீன்பிடிக் கிராமமான குடாவெல்லயை நோக்கி எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். இங்குதான் கடலன்னையின் மாறுபாடான குணாம்சத்தை எம்மால் தரிசிக்க முடிந்தது.
குளிர்ச்சியைத் தரும் மரங்களின் செழுமை நிறைந்த குடாவெல்ல கிராமத்தில் மக்களின் எளிமையான கலப்படமில்லாத வாழ்வைக் காண முடிந்தது. வாகன நெரிசலில் அகப்பட்டு அவஸ்தைப்படாமல் சுத்தமான கடற்காற்றை சுவாசித்தவாறு தமது நாளாந்தக் கடமைகளை ஆசுவாசமாக அம்மக்கள் செய்வதைப் பார்க்கையில் 'அட இந்த அமைதியான வாழ்க்கை எமக்குக் கிட்டாதோ" என்ற ஏக்கப் பெருமூச்சு எனக்கு மட்டுமன்றி பொதுவாக நகரத்தில் இயந்திர மயமான வாழ்க்கை வாழும் அனைவருக்குமே எழக்கூடியது.
கொழும்பிலிருந்து கரையோரப் பாதை வழியாகத் தென்பகுதிக்குச் செல்கையில் மாத்தறையைக் கடந்த பின் வரும் முதல் பிரதான நகரம் திக்வெல்ல. இது இலங்கையின் தென்கரையோரத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்கும் தங்காலை பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ளது. திக்வெல்ல நகரத்தை அடைந்ததும் ஹூம்மானய அமைந்துள்ள குடாவெல்ல பிரதேசத்தைக் கண்டுபிடிப்பதற்கு நாம் அதிகம் சிரமப்படவில்லை. ஹூம்மானய அமைவிடத்தை அடையாளம் காட்டும் ஏராளமான வீதிப் பதாதைகள் எமக்கு உதவின.
நாம் பயணித்த வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினோம். ஒற்றையடிப் பாதையிலும் சற்று விசாலமான நடைபாதையின் இருமருங்கிலும் சோளப்பொரி, கச்சான் போன்ற நொறுக்குத் தின்பண்டங்களும் 'வெரலு" (இலங்கையின் ஒலிவ் என்று அழைக்கப்படும் புளிச்சுவை கொண்ட வெரளிப் பழம்), மாம்பழம் முதலிய பழங்களும் தாகம் தீர்க்கும் குடிபானங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு சின்னஞ்சிறு விற்பனைக் கூடாரங்களில் வியாபாரம் மெதுவாக ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தது.
ஒப்பனைகள் இல்லாத இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தென்கரையோரப் பிரதேசமான திக்வெல்லயில் அமைந்துள்ள சிறிய மீன்பிடிக் கிராமமே குடாவெல்ல. இந்தக் கிராமத்தின் வரலாறு 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. நீர்கொழும்பில் இருந்து வந்த மீனவர்கள் இங்கு மீன்வளம் சிறந்ததாகக் காணப்பட்டதால் இங்கேயே குடியமர்ந்து இக்கிராமத்தை உருவாக்கினர். இங்கு தான் கடலன்னையின் விசித்திர குணாம்சமான ஹூம்மானயவை எம்மால் தரிசிக்க முடிந்தது.
மீன்பிடியைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் பல வகையான மீன்களில் போடப்பட்ட கருவாடு மற்றும் கித்துள் போன்றவற்றையும் மலிவான விலைகளில் விற்பதைக் காணமுடிந்தது.
பெட்டிக் கடைகளை ரசித்;தபடி சென்ற நாம், படிக்கட்டுகள் கொண்ட பாதை வழியே மேலே சென்றபொழுது ஹூம்மானய தகவல் நிலையம் எம்மை வரவேற்றது. உள்ளே ஹூம்மானய பற்றிய பூகோள, சூழலியல் தகவல்களைக் காட்சி வடிவில் சித்தரித்துக் காட்சிப்படுதியிருந்தார்கள். உள்நாட்டு மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வாசித்து அறிந்து கொள்ளும் விதத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இத்தகவல்கள் காணப்படுகின்றமை பாராட்டப்படத்தக்கது.
தகவல்களை வாசித்து அறிந்து கொண்ட எமக்கு ஹூம்மானய அமைந்துள்ள இடத்தை வரைவில் அடைய வேண்டும் என்ற ஆவல் மேலிட அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொண்டு தாமதிக்காது விரைவாக நடந்தோம்.
தூரத்தில் பழுப்பு, மஞ்சள், கபிலம், வெளிர் கறுப்பு நிறங்களைக் கொண்ட பாறைப் பரப்பு ஒன்று உயரத்தில் என் கண்ணுக்குத் தென்பட்டது. மேலும் முன்னோக்கிச் செல்ல ஹ_ம்ம்ம்... என்ற ஓசையுடன் 'V' வடிவ பள்ளத்திலிருந்து சிறுநீரலை ஒன்று முதன் முதலாக மேல்நோக்கி சீறியடித்தது. அவ்வோசை 'வருக..வருக" என்று எனை வரவேற்பதைப்போல் இருக்கவும் நடந்து சென்ற களைப்பு நீங்கி உற்சாகமானேன்.
உடன் வந்த எம்முடைய கமெரா வல்லுனர்களும் தமது கருவிகளை சட்டெனத் தயார்ப்படுத்தி சீறி எழும் கடலலையை எக்கோணத்தில் சிறப்பாகப் படம்பிடிக்கலாம் என்று ஆராயத்தொடங்கி விட்டார்கள். கடல் நீர் சீறிப் பாயும் அந்தப் பள்ளத்தில் என்னதான் உள்ளது என்று எனது வெற்றுக் கண்ணை முடிந்தளவு தொலைநோக்கியாக்கிப் பார்க்க முயற்சித்தேன். ம்ஹூம்...!! எதுவும் கண்ணுக்குப் புலனாகவில்லை. இவ்வாறே யோசித்தபடி இருக்க இன்னுமொரு இரைச்சல்...! மீண்டும் ஒரு சீறல்...! இத்தடவை முன்பைக் காட்டிலும் அதிக உயரமாக.
ே மாதம் முதல் செப்டெம்பர் வரையான தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் காற்றின் வேகம் சராசரி ஒரு மணிநேரத்திற்கு 22கி.மீ வேகத்தை அடையும்பொழுது அதிஉயரமாக நீர் சீறியடிப்பதைப் பார்த்து ரசிக்கலாம்.
அடுத்தடுத்து இரண்டு மூன்று தடவைகள் அழுத்தம் பெற்ற கடலலை மேலே, மேலே வந்து சென்றது. பின் சற்றே நீண்ட இடைவேளை கிடைக்கவும் நான் நின்ற இடத்தை விட்டு அப்பாலும் இப்பாலும் சென்று சுற்றிப் பார்த்தபடி இருந்தேன்.திடீரென அதே இரைச்சல் சற்றே பலமாகக் கேட்டது. அந்தக் காட்சியைக் கச்சிதமாக கிளிக் செய்வதற்கு எனது சகாக்கள் தயாராகவும் பாறைவெடிப்புக@டாக அதி வேகமாக வந்த கடலலை மிக உயரமாகச் சென்று சீறிப்பாயவும் சரியாக இருந்தது. "ஹூ...!!!!!!" எங்களை அறியாமலே உற்சாகக் குரல் எழுப்பினோம்.
பாறையில் மோதித் தெறித்த வெண்நுரைகள் எம்மையும் ஆராதித்தன. சிறிது கவனம் எடுத்து சிந்தித்த எனக்கு, காற்று பலமாக வீசும் ஒவ்வொரு தடவையும் நீரலை மேலெழும்பி சீறியடிப்பதை அவதானிக்க முடிந்தது. இதனை ஹூம்மானய தகவல் நிலையமும் உறுதிப்படுத்தியிருந்தது. மே மாதம் முதல் செப்டெம்பர் வரையான தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் காற்றின் வேகம் சராசரி ஒரு மணிநேரத்திற்கு 22கி.மீ வேகத்தை அடையும் வேளையில், அதிஉயரமாக நீர் சீறியடிப்பதைக் கண்டு ரசிக்க முடியும்.
பகலவன் தனது உச்சப் பலத்தைக் காட்டிக்கொண்டிருந்தபொழுதும் எங்கே முன்பைவிட உயரமாக நீர் சீறியடிக்குமா என்று பார்ப்பதிலேயே எமது ஆர்வம் இருந்தது. இதேவேளை, உயரமான பாறையின் மேல் நின்ற எனக்கு, ஒரே தடவையில் ஹூம்மானயவையும் இந்து மாகடலின் வியாபகத்தையும் ரசிக்க முடிந்தமை ஒரு சுவாரஸ்யமான அநுபவம்.
தகதகக்கும் வெய்யிலில் தங்காலைக் கடல் முகில்களற்ற தெளிவான வானத்தைப் பிரதிபலித்து மின்னியது. கடலலைகள் கரையில் சிதறிக் கிடக்கும் பாறைகளின் மீது செல்லமாக வந்து மோதிச் சென்றன. மனம் திருப்திப்படும் வகையில் இக்காட்சிகளைக் கண்களிலும் கமெராக்களிலும் நிறைத்துக் கொண்ட நாம், ஓய்வாக அமர்ந்தால் நல்லது என்று நினைக்கையில் சில அடிகள் தொலைவில் உட்புறமாக போடப்பட்டிருந்த சீமெந்து இருக்கைகள் எமை வந்து உட்காருமாறு அழைப்பு விடுத்தன. கண்டல் தாவரங்களின் நிழலின் கீழ் கடற்காற்றின் குளுமை எனைத் தழுவ சற்றே கண்மூடி உட்கார்ந்திருந்தேன்.
இறுதியாக நாம் புறப்பட ஆயத்தமான வேளை, எமக்குப் பசியுணர்வு எட்டிப் பார்த்தது. நாம் கொண்டு சென்ற தண்ணீர் எமது தாகத்தைத் தீர்க்கப் போதியதாயிருந்தாலும், நாக்கு மேலும் சுவையாக ஏதேனும் தருமாறு கேட்டது. அதற்கேற்றாற்போல் திரும்பும் வழியில் ஒரு பெண்மணி செந்நிற மாம்பழங்களை அழகாகச் சீவி விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் எம்கால்கள் தாமாகவே நிறுத்திக் கொண்டன.
உப்பும் தூளும் கலந்த செம் மாங்கனித் துண்டுகளை அனைவருமே ருசித்து மகிழ்ந்தோம். ஆக மொத்தத்தில் மனதுக்கு இனிமையாக அமைந்த பயணம் இறுதியில் நாவுக்கும் இனிமையாக அமைந்து நிறைவடைந்தது!.
This article features the 'Hummanaya' in Dickwella, the world's second largest blowhole.