
கண்டி எசல பெரஹரவில் பார்வையாளர்களை அதிகளவில் தன்வசப்படுத்தும் வெஸ் நாட்டியம்
இரண்டாம் நூற்றாண்டில் கண்டி இராச்சியத்தின் அரச குடும்பத்தில் தோன்றிய கண்டிய நடனத்தின் வரலாறு, கோம்ப தெய்யோ எனப்படும் கடவுளின் ஆசியை வேண்டி நடாத்தப்படும் 'கோம்ப ஹங்காரிய' என்ற சடங்கை அடிப்படையாக வைத்து வளர்ச்சி கண்டது.
விபரம்: பவானி பாலா
இலங்கையின் கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியக் கலை வடிவமே கண்டிய நடனம். தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்நடனம் 2,500 வருடங்களுக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த விஜய மன்னன் காலத்தில் தோன்றியதாக செவி வழிக்கதைகள் கூறுகின்றன.
விஜய மன்னன் மீதிருந்த சினம் காரணமாக புராதன இலங்கையின் பூர்வீகக் குடிமக்களில் ஒருத்தியான குவேனி இட்ட சாபத்தினால் விஜயனின் சகோதரன் பாண்டுவாசதேவன் நோய்வாய்ப்பட்டான் என்றும் அந்த நோயிலிருந்து மீள்வதற்காக தீய சக்திகளை விரட்டும் 'சாந்திகர்ம நிகழ்வு' நடாத்தப்பட்டது என்றும் அறிகின்றோம்.
பின்னாளில் இந்த சாந்திகர்ம நிகழ்வு தூய்மைப்படுத்தும் சடங்கான 'கோம்ப ஹங்காரிய' நிகழ்வாக மாற்றம் பெற்றது. மக்களை நோய் நொடியிலிருந்தும் பிற துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் 'கோம்ப' (இது தமிழில் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த வேப்ப மரம் என்று பொருள்படும்) தெய்வத்தின் ஆசி வேண்டி இந்தச் சடங்கு நடாத்தப்பட்டு வந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் 19ஆம் நூற்றாண்டு முதல் கண்டிய நடனம் எசலபெரஹரவில் இடம்பெற ஆரம்பித்தது.
இன்று இலங்கையின் தேசிய நடனம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள இக்கண்டிய நடனத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முதன்மையானது வெஸ் நடனம். வெஸ் என்பது கண்டிய நடனக் கலைஞர்கள் அணியும் வேலைப்பாடுகளைக் கொண்ட பாரம்பரிய உடையைக் குறிக்கின்றது. முழுமையாக அலங்கரித்த வெஸ் நடனக்காரர் கோம்ப தெய்வத்தைப் பிரதிபலிப்பதாக மக்கள் நம்புகின்றார்கள்.
குஞ்சத்துடன் கூடிய தலை அணி, மணிகளால் இழைக்கப்பட்ட மார்பணி, காதணி, சலங்கை, வளையல், இடுப்புப்பட்டியின் முன்புறத்தில் முக்கோண வடிவில் அமைந்த ஒட்டியாணம் முதலான அறுபத்து நான்கு அணிகலன்கள் சேர்ந்து வெஸ் உடையைப் பூரணப்படுத்துகின்றன. நடனக்காரர்களின் ஆடை அலங்காரங்களும், ஆபரணங்களும் பார்ப்போரை ஈர்க்கும் தன்மை வாய்ந்தவை. வெஸ் உடையும் அணிகலன்களும் வெள்ளை, சிவப்பு, வெள்ளி மற்றும் மஞ்சள் நிறங்களில் காணப்படுகின்றன. கண்ணைக் கவரும் இந்த வர்ணக் கலவையும் நாட்டிய அசைவுகளும் பார்ப்பவர்களுக்கு எப்பொழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியன.
முன்னோக்கி நகர்ந்து செல்லும் ஒரு அசைவியக்க நடனக்கோவையாக காணப்படுவது வெஸ் நடனத்தின் தனித்தன்மை
வெஸ் நடனக் கலைஞர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த நடனத்தைக் கற்று வருகின்றார்கள். கண்டிய நடனத்தின் அடிப்படைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த மாணவன் தலையணி அணியும் பிரதான சடங்கு 'வெஸ் மாங்கல்யம்' எனப்படும். உற்றமும் சுற்றமும் திரண்டிருக்க நடைபெறம் இந்தப் புனிதமான நிகழ்வில் பல மத அனுட்டாங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்னரேயே மாமிச உணவுகளைத் தவிர்த்து சைவ போஷகனாக மாணவன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த காலப்பகுதியில் மரணச்சடங்குகளில் கலந்து கொள்வதை மாணவன் தவிர்த்துக் கொள்வான்.
வெஸ் நடனத்தின் விசேட அம்சமாகத் திகழ்வது அதன் அங்க அசைவுகள் அல்லது ஆட்ட நிலைகள். கைகளும் கால்களும் தாள லயத்திற்கேற்ப அசைகின்றன. சிறிய அபிநயங்கள் முதல் கண்களை வியக்க வைக்கும் அசைவுகள் வரை ஒரு தேர்ச்சி பெற்ற வெஸ் கலைஞன் ஒப்புவிக்கின்றான். வெஸ் நடனக்காரர்களுக்குத் தாள லயம் வழங்கும் மத்தள வாத்தியக் கலைஞரும் இதற்கென உள்ள சிறப்பு உடைகள் அணிந்து வெஸ் நடனக்கலைஞருக்கு அண்மையாகச் செல்கின்றனர். வாத்தியம் இசைப்பவரும் இணைந்து ஆடல்கோலங்களை வழங்குவது இந்நடனத்தை மேலும் சிறப்பிக்கின்றது.
கண்டிய வெஸ் நடனத்தில் 'வண்ணம்' என்று சொல்லப்படும் புராண கதைகள், புராண நாயகர்கள் மற்றும் இந்து சமயத்துடன் தொடர்புடைய விலங்குகளும் பறவைகளும் ஆடல் வடிவங்களில் சித்தரிக்கப்படுகின்றன. பாரம்பரியச் சிறப்பு பொருந்திய வெஸ் நடனம் பெரஹர, வொசாக் உள்ளிட்ட விசேட பௌத்த தினங்கள், இந்துக் கோவில் திருவிழாக்கள், கௌரவ விருந்தினர்களை வரவேற்றல், திருமண நிகழ்வுகள் போன்ற அனைத்து முக்கிய கலாசார நிகழ்வுகளிலும் ஆடப்பட்டு வருகின்றது.
ஆரம்ப காலங்களில் ஆண்கள் மட்டுமே கற்று வந்த இந்த நடனத்தை தற்காலத்தில் பெண்களும் கற்று வருகின்றார்கள். ஆண்களின் நடன அசைவுகளும் பெண்களின் நடன அசைவுகளும் வேறுபடுவதை இங்கு காணலாம். பொதுவாகத் தாண்டவ அடைவுகளை ஆண்களும் நளினம் மிகுந்த அடைவுகளைப் பெண்களும் ஆடுவதே மரபாக உள்ளது.
இலங்கையின் மத்திய மலைநாட்டில் பிறந்தாலும் நாடளாவிய ரீதியில் வளர்ச்சி பெற்று தனக்கென தனியான இடத்தைப் பெற்றுள்ள கண்டி நடனத்தின் மீதான பற்றும் ஆர்வமும் இளம்தலைமுறையினர் மத்தியிலும் பெருகி வருகின்றமை வரவேற்கத்தக்கது.
இந்த ஆக்கத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்களை மூத்த வெஸ் நடனக் கலைஞர், விஸ்வ கலாகீர்த்தி லயனல் சிறிசேன அவர்கள் வழங்கி உதவியிருந்தார்.
'வெஸ் தலையணி’
வெஸ் நடனக் கலைஞன் அணியும் தலை அணி மிகவும் புனிதமானது. மிகத் தொன்மை வாய்ந்த இந்த ஆடைவடிவமைப்பு பல ஆயிரம் வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மாற்றங்கள் ஏதுமின்றி பேணப்பட்டு வருகின்றது. நோயால் பீடிக்கப்பட்டவர்கள் குணமடைய, தெய்வத்தன்மை வாய்ந்த இந்தத் தலை அணியின் அருகில் நாணயக்குற்றி ஒன்றை நேர்த்திக் கடனாக வைத்து வெஸ் நடனக் கலைஞர் கடவுளை வேண்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.
This article describes the cultural attributes of the upcountry dance, 'Ves Natuma'.